திருவெண்ணெய் நல்லூர்
சுந்தரரின் அருள் வாழ்விற்கு இடமான தலம். வழக்கிட்டு, ஆரூரரை வலிய வந்து ஆட்கொண்ட தலம், நின் 'வருமுறைமனையும்
நீடு வாழ்க்கையும் காட்டுக'
என்ற கேட்டவர்க்கு 'என் இருப்பிடம் இதுவே' என்று இறைவன் காட்டிய திருக்கோயிலை உடைய பதி. 'அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான்
என்றும்,
'தரும தேவதை' என்றும் புகழ்பெற்ற சடையப்ப வள்ளலின் பதி. சைவ
சித்தாந்த சாத்திரங்களள் தலையானதாகத் திகழும் சிவஞானபோதம் நூலை அருளிச் செய்த
மெய்கண்டார் (மெய்கண்ட தேவர்) வாழ்ந்து உபதேசம் பெற்ற சிறப்புத் தலமும் இதுவே.
முதிய வேதியராய் வந்து இறைவன் சுந்தரரைத் தடுத்தாண்ட இடம் - தடுத்தாவூர் என்று
வழங்குகிறது. இவ்விடம் திருநாவலூரிலிருந்து, திருவெண்ணெய்
நல்லூருக்குப் போகும் வழியில் சிறிய கிராமமாகவுள்ளது.
ஊரின் பெயர் 'திருவெண்ணெய்
நல்லூர்'.
கோயிலின் பெயர் 'திருவருட்டுறை' என்பதாம்.
'வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் அத்தா' என்னும் சுந்தரர் வாக்கால் இதையறியலாம். சுந்தரரின்
முதல் தேவாரம் பிறந்த தலமிஃது. கிராம மக்கள், இவ்வூரில்
அம்பாள் வெண்ணெய்யால் கோட்டை கட்டி வீற்றிருப்பதாகக் கூறுகின்றனர்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. கோபுரம் கடந்து
உள்நுழைந்ததும் சுந்தரர் வழக்கு நடந்த, 'வழக்கு தீர்த்த மண்டபம்' வழக்கு
வென்ற அம்பலம் உள்ளது. இம்மண்டபம் கிலமாகியுள்ளது. அடுத்து, செப்புக் கவசமிட்ட கொடிமரம், முன்னர் கொடிமர விநாயகர், பலிபீடம் உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு
இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே
சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். (இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன்
காட்சியளிக்கிறார்.)
கல்மண்டபத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள்
வரிசையாகவுள்ளன. நேரே சோமாஸ்கந்தர் சந்நிதி. பக்கவாயில் வழியாக உட்சென்றால் மூலவர்
சந்நிதி. எதிரில் சாளரம் உள்ளது. மூலவர் அழகான சிவலிங்கத் திருமேனி.
திருஆலவாய்
தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச்
சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி
சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன்
வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர்
இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும்
பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு
மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு
உண்டு.
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி
சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை
பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை வணங்கி விட்டே பிறகு
சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோவில் அமைப்பு: எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய
இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு
வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய
கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு
கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட
உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல
அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.
மீனாக்ஷி அம்மன்
சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி
கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில்
எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண்
மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி
இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி
அருட்காட்சி தருகிறாள்.
திருஆரூர்
திருப்பாற்கடலில்
திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார்.
திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின்
இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்;
அதன்பின்
முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட
மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.
இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே
வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம். கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச்
சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில்
இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
திருப்பாம்புரம்
கைலாயத்தில் விநாயகர் தன் தந்தை சிவபெருமானை
வணங்கியபோது,
அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிப்பட்டதாக நினைத்து கர்வம் கொண்டது.
இதனால் கோபம் அடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார்.
பின்னர் அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக
மற்றவர்களையும் தண்டித்தலாகாது என்றும், தவறு
செய்த பாம்பையும் மன்னிக்கும்படி சிவபெருமானை வேண்டினர். மகா சிவராத்திரியன்று
நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடன்,சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன்
ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் சென்று வேண்டி சாபவிமோசனம் பெறலாம் என சிவன்
அருளினார். அதன்படியே நாகங்கள் வேண்டி சாபவிமோசனம் பெற்றன.
ஆலயத்தின்
சிறப்புகள்:
இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் – சேஷபுரீஸ்வரர். தாயார் – வண்டுசேர் குழலி. தல விருட்சம் – வன்னி. ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல், ஒரே
சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம். இத்தலம் சர்வ தோஷ பரிகாரத் தலம்
எனப் புராணங்கள் கூறுகின்றன. அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், ராகு புத்தி, கேது
புத்தி நடந்தால்,
களத்திர தோஷம் இருந்தால், இருபாலருக்கும் திருமணத் தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ
பாம்பைக் கொன்றிருந்தாலோ இந்த தலத்திற்கு சென்று பரிகாரம் செய்தல் அவசியம்.
திருக்கலிக்காமூர்
சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது, சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய், அமங்கலையாக (கணவனை இழந்த பெண்) இருந்ததைக் கண்டு வருந்தியது. பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை, வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை
நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார். அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், “சுந்தரேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு“வில்வவன நாதர்” என்றும் பெயருண்டு.