திங்கள், 11 மார்ச், 2013

திருமலை நாயக்கர் மஹால் - மதுரை



மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் கி.பி.1636 ல் கட்டப்பட்டது. இந்து, முஸ்லீம் கட்டிட நுட்பங்கள் சேர்த்து அமைக்கப்பட்ட (இந்தோ-சாரசீனிக் முறைப்படி) அரண்மனை. அன்றைய அரண்மனையில் சொர்க்க விலாசம், ரங்க விலாசம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடம்; ரங்க விலாசம் மன்னரின் தம்பி முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடம்.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. முற்றத்தின் வழியாக உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி உள்ளது.
முற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல்.
இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்த பகுதியின் வழியாகக் காண்பது சொர்க்க விலாசம். மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும், குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் மேதைமைகள். இப்பகுதியின் நடுவில் மிகவும் விசாலமான இடமும், அதன் மேல் கவிந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிப்பதால் சொர்க்க விலாசம் என்ற பெயர். இவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு மண்டபம் வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.
இன்றைய மஹாலில் ரங்கவிலாசம் இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் இருந்த பகுதி. பத்து எழிலான தூண்கள் முகப்பிலும், தூண்களில் நுண்ணிய வேலைப்பாடுகளும் அமைந்து  கம்பீரமாகத் திகழ்ந்த இடம். ஆயுதங்களும், பல்வகை இசைக்கருவிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதி. 1853 ல் பழுதுபார்த்தும் காப்பாற்ற இயலாமல் போனது நமக்கெல்லாம் இழப்பே!
 
மண்டபத்தைச் சுற்றி 900 அடி நீளமும், 600  அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்டு விளங்கிய சுற்று மதில் சுவரும் இப்போது இல்லை. மிகப் பலவீனமாக இருந்ததால் 1837 ல் இடிக்கப்பட்டது. மதிலுக்கு வெளியில் இருந்த நந்தவனமும், அதன் மையத்தில் இருந்த கட்டிடமும் நாம் இழந்துவிட்ட செல்வங்கள்.
 
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள். தயவுசெய்து இருப்பதைக் காப்போம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக